சென்னையில் உள்ள திருவெற்றியூர் அருள்மிகு வடிவடையம்மன் திருக்கோவிலில் உள்ள, ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஞான சக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானம் உடையவர்களாக திகழ அருள் புரிகிறார்.
நாள் தோறும் உச்சிக் காலை பூஜையின் போது, சிவப்பு நிற சேலை உடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப் பக்தர்கள் படைத்தால், வேண்டும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
பூலோகத்தில், முதன்முறையாக இத்திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டதால், இங்குள்ள சிவபெருமான், ஆதிபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள மூலவர் திருவாருர் தியாகராஜரை ஒத்திருப்பதால், தியாகராஜ சுவாமி என அழைக்கப்படுகிறார்.
ஆண்டு முழுவதும் ஆதிபுரீஸ்வரர் தங்க நாகம் கவசம் அணிந்த நிலையில் காட்சி தருவது வழக்கம். இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மூன்று நாட்களுக்கு மட்டும் தங்க நாகக் கவசம் திறக்கப்பட்டு, புணுகு, சாம்பிராணி, தைல அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி 27-ம் தேதி மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரருக்கு, தங்க நாகம் கவசம் திறக்கப்பட்டு, புணுகு, சாம்பிராணி, தைல அபிஷேகம் நடைபெற்றது.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஆன்மீக அன்பர்கள், பொது மக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளதால், 2 லட்சம் பேருக்கு மேல் சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.