எதிரி நாட்டு விமானங்களைக் கண்காணிக்கும் வகையில், மிக உயரமான பகுதிகளில் நிலைநிறுத்தக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய ஸ்ட்ரைக்கர் கவச போர் வாகனத்தை இந்திய இராணுவத்திற்கு வழங்க அமெரிக்க அரசாங்கம் முன்வந்திருக்கிறது.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய ஸ்ட்ரைக்கர் கவச போர் வாகனங்களை அமெரிக்கா இந்திய இராணுவத்திற்கு வழங்க முன்வந்திருக்கிறது. மேலும், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இவ்வகை வாகனங்களை தயாரிக்கவும் முன்வந்திருக்கிறது.
இந்தியாவுடனான 2+2 உரையாடலின்போது, அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஜெ ஆஸ்டின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவிற்கு ஸ்ட்ரைக்கர் சிஸ்டம்களை விற்பதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது இது முதல் முறை அல்ல.
இந்திய நிறுவனங்களுடனான கடந்த சில உயர்மட்டக் கூட்டங்களின்போதும் இதை செய்திருக்கிறது. ஸ்ட்ரைக்கர் வாகனங்களுக்கான அமெரிக்க ஸ்தாபனத்தின் முன்மொழிவை இந்தியா பரிசீலித்து வருகிறது. எனினும், இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை” என்றார்கள்.
தனியார் தொழில்துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய கவச வாகனங்கள் உட்பட கவச போர் வாகனங்களை உருவாக்கும் துறையில் இந்திய பாதுகாப்புத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருக்கும் நேரத்தில் அமெரிக்க இந்த முன்மொழிவை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.