இது போருக்கான தருணம் அல்ல: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இது போருக்கான தருணம் அல்ல: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 30, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இது போருக்கான தருணம் அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது வரலாற்று சிறப்பு மிக்கது. தொடர்ந்து, காணொலி வாயிலாக நடந்த ஜி20 மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

தற்போது, ஜி20 அமைப்பின் இந்தியா தலைமை நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், தனியார் செய்தித்தாள் ஒன்றில் பிரதமர் மோடி எழுதி இருக்கும் கட்டுரையில், “ஜி20 கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. வசுதைவ குடும்பகம் எனப்படும் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற உணர்வை புத்துயிர் பெறச் செய்ய வேண்டிய தருணம் இதுவாகும்.

கடந்த ஆண்டு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபோது, உலக அளவில் பல்வேறு சவால்கள் தீவிரமாக நிலவின. குறிப்பாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீள வேண்டியது தொடர்பான கவலைகள், பருவ நிலை மாற்ற அச்சுறுத்தல்கள், உலக அளவில் நிதி நிலைத்தன்மையின்மை, வளரும் நாடுகளில் கடன் நெருக்கடி போன்றவற்றின் தீவிரத் தன்மை அதிகமாக இருந்தது.

மேலும், முரண்பாடுகள் மற்றும் போட்டிகளுக்கு மத்தியில், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது. இது முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருந்தது. இந்த சவாலான சூழலில் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தன்மையில் இருந்து மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி என்ற தத்துவத்திற்கு மாறுவதற்கான ஒரு மாற்று உத்தியை வழங்க முயன்றுள்ளது.

நம்மைப் பிரிக்கும் அம்சங்களை விட, நம்மை இணைக்கும் அம்சங்களை உலகுக்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது. முக்கியமாக, உலகளாவிய பேச்சுவார்த்தைகளும், ஆலோசனைகளும் அதிகரிக்க வேண்டும். ஒரு சிலரின் நலன்களைவிட பலரது தேவைகள் முக்கியமானது. இதற்கு பன்முகத்தன்மையில் அடிப்படை சீர்திருத்தம் தேவை என்பதை நாம் அறிந்து செயல்படுகிறோம்.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, லட்சியத்துடன் கூடிய செயல்பாடுகள், செயல் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கமான நடைமுறைகள் ஆகிய 4 அம்சங்கள் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவ அணுகுமுறையை வரையறுக்கும் முக்கிய அம்சங்களாகத் திகழ்ந்தன. ஜி20 கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஜி20 தலைவர்களின் புதுடெல்லி தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது நம் அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டிற்குச் சான்றாக அமைந்திருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பது, இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் மையக் கருப்பொருளாக இருந்து வருகிறது. 55 ஆப்பிரிக்க நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான ஆப்ரிக்க யூனியன் ஜி20 அமைப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஜி20 உலகின் 80 சதவீத மக்கள் தொகையை உள்ளடக்கிய நாடுகளின் அமைப்பாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் இந்த ஆக்கப்பூர்வமான நிலைப்பாடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது மற்றும் வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்த விரிவான கலந்துரையாடலை ஊக்குவித்திருக்கிறது.

மேலும், உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படும் வளரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ‘உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்’ என்ற உச்சிமாநாட்டை இந்தியா 2 கட்டங்களாக நடத்தியது. இது பன்முகத்தன்மைக்கு புதிய விடியலாக அமைந்தது. இம்மாநாட்டில் வளரும் நாடுகளின் கவலைகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

அனைவரையும் உள்ளடக்கிய தன்மை என்பது ஜி20 தொடர்பான இந்தியாவின் உள்நாட்டு அணுகுமுறைகளிலும் எதிரொலித்தது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு பொருத்தமான வகையில் மக்களின் தலைமைத்துவமாக அமைந்தது. மக்கள் பங்கேற்பு நடவடிக்கைகளின் மூலம் ஜி20 நிகழ்வுகள் நாட்டின் 140 கோடி மக்களையும் சென்றடைந்தன.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜி20 தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஜி20 தத்துவத்திற்கேற்ப முக்கியமான அம்சங்களில் விரிவான வளர்ச்சி இலக்குகளின் மீது சர்வதேச கவனம் அமைவதை இந்தியா உறுதிசெய்தது. வரும் 2030-ம் ஆண்டை மையமாகக் கொண்ட முக்கியமான செயல்திட்டத்தை இந்தியா தலைமையிலான ஜி 20 வகுத்து அளித்திருக்கிறது.

இதில், சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய சிக்கல்களுக்கு செயல் சார்ந்த அணுகுமுறையை இந்தியா எடுத்துரைத்திருக்கிறது. இதன் மூலம் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஜி20 செயல் திட்டத்தை இந்தியா வழங்கி இருக்கிறது.

இந்த முன்னேற்றங்களுக்கான ஒரு முக்கிய சக்தியாக, வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உள்ளது. ஆதார், யு.பி.ஐ. மற்றும் டிஜிலாக்கர் போன்ற புரட்சிகரமான டிஜிட்டல் நடைமுறைகளின் பலன்களை இந்தியா நேரடியாகக் கண்டிருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு இந்தியா தீர்க்கமான பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது.

ஜி20 மூலம், உலகளாவிய தொழில்நுட்ப ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு களஞ்சிய பணிகளை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது.

16 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளைக் கொண்ட இந்தக் களஞ்சியம், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு பெரிதும் உதவும்.

நமது பூமியைப் பொறுத்தவரை, அவசரமான, நிலையான மற்றும் சமமான மாற்றத்தை உருவாக்க, லட்சியத்துடன் கூடிய அனைவரையும் உள்ளடக்கிய நோக்கங்களை நாம் அறிமுகப்படுத்தினோம்.

ஜி20 பிரகடனத்தின் ‘பசுமை மேம்பாட்டு ஒப்பந்தம்’ பசியை எதிர்த்துப் போராடுவதிலும், பூமியைப் பாதுகாப்பதிலும் உள்ள சவால்களை எதிர்கொள்ள வழிகாட்டுகிறது.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் தன்மைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, சூழலுக்கேற்ற உற்பத்தி நடைமுறைகளை விரிவாக எடுத்துரைக்கிறது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஜி20 பிரகடனம் அழைப்பு விடுத்திருக்கிறது.

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பை நிறுவுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜனுக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டம் ஆகியவற்றுடன் துாய்மையான, பசுமையான உலகை உருவாக்குவதற்கான ஜி20-ன் லட்சியங்கள் மிக உறுதியானவையாக அமைந்துள்ளன. இது எப்போதுமே இந்தியாவின் நெறிமுறையாக உள்ளது.

அதோடு, சுற்றுச் சூழலுக்கேற்ற நிலையான வாழ்க்கை முறை இயக்கம் மூலம், நம் பழமையான மற்றும் நிலையான பாரம்பரியங்களிலிருந்து ஒட்டுமொத்த உலகமும் பயனடைய முடியும். இப்பிரகடனம் பருவநிலை நீதி மற்றும் சமத்துவத்திற்கான நம் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலில், உலகளாவிய வடக்கு நாடுகள் எனப்படும் வளர்ந்த நாடுகளிடமிருந்து கணிசமான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு தேவை என்று இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

முதல் முறையாக, பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருந்து டிரில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு வளர்ச்சி நிதியின் உயர்வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

வளரும் நாடுகள் 2030-ம் ஆண்டிற்குள் தங்களது தேசிய ரீதியான பங்களிப்புகளை நிறைவேற்ற, 5.9 டிரில்லியன் டாலர் தேவை என்ற கோரிக்கையை ஜி20 ஏற்றுக்கொண்டது. வளங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த, பெரிய மற்றும் மிகவும் பயனுள்ள பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் முக்கியத்துவத்தை ஜி20 வலியுறுத்துகிறது.

அதேசமயம், ஐ.நா. சீர்திருத்தங்களில் குறிப்பாக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் போன்ற முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பதில் இந்தியா ஒரு முன்னணி பங்காற்றி வருகிறது.

இது மிகவும் சமத்துவமான, உலகளாவிய ஒழுங்கை உறுதி செய்யும். இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டுப் பிரகடனத்தில் பாலின சமத்துவம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

அடுத்த ஆண்டு, மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்த ஒரு பிரத்யேக பணிக்குழுவை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில், மூன்றில் ஒரு பங்கு இடங்களை மகளிருக்கு ஒதுக்கும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா 2023 நிறைவேற்றப்பட்டிருப்பது மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

இணக்கமான கொள்கை, நம்பகமான வர்த்தகம் மற்றும் இலக்கை நோக்கிய பருவநிலை செயல்திட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான முக்கிய அம்சங்களில் ஒத்துழைப்பை அதிகரிப்பதை ஜி20 புதுடெல்லி பிரகடனம் உள்ளடக்கி இருக்கிறது.

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் போது 87 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், 118 ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த கால எண்ணிக்கைகளை விட இது அதிகம் என்பது பெருமைக்குரிய அம்சமாகும். ஜி20 தலைமைத்துவத்தின் போது, புவிசார் அரசியல் பிரச்னைகள், பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சி ஆகியவை குறித்த விவாதங்களை இந்தியா நடத்தியது.

தீவிரவாதமும், அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். சமரசமற்ற கொள்கையுடன் தீவிரவாதத்தை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியது. பகைமையை வளர்ப்பதை தவிர்த்து மனிதாபிமானத்தை உள்வாங்கி செயல்பட வேண்டும் எனவும், இது போருக்கான காலம் அல்ல என்பதையும் இந்தியா மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.

ஜி20 தலைமைத்துவத்தின்போது இந்தியா அசாதாரணமான சாதனைகளை நிகழ்த்தியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பன்முகத்தன்மைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.

வளர்ச்சியை ஆதரிக்கும் செயல்பாடுகளுடன் மகளிருக்கு அதிகாரமளித்தலுக்காக எல்லா நிலைகளிலும் இந்தியா குரல் கொடுத்திருக்கிறது. மக்களையும், பூமியையும் மையமாகக் கொண்ட அமைதி மற்றும் வளத்திற்கான கூட்டு நடவடிக்கைகள் வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் ஜி20 தலைமைத்துவத்தை பிரேசிலிடம் இந்தியா ஒப்படைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiG20Article
ShareTweetSendShare
Previous Post

4 ½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

Next Post

உலகக்கோப்பை ஹாக்கி : இந்தியா அபார வெற்றி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies