உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் புகழ் பெற்றது தஞ்சாவூர் பெரிய கோவில்.
தமிழர்களின் தொன்மை, கலாச்சாரம், பண்பாடு, சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு கலைகளின் நுணுக்கங்களையும், ஆட்சி முறைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் விளங்கி வருகிறது.
இந்த கோவிலைக் காண, பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அதே வேளையில், தஞ்சை பெரிய கோவிவில் இதுநாள் வரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆடைகள் அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனால், திருப்பதி, உஜ்ஜைனி உள்ளிட்ட பிரபல திருக்கோவில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு இருப்பது போன்று இங்கும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.