சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில், ‘யூ டியூப்’ சானல் ஒன்றுக்கு, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்தது பற்றி, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, ‘சுப்ரீம் கோர்ட்டுல ஒரு என்.ஜி.ஓ. போய் இந்தப் பிரச்னையை ஆரம்பிக்குது. இந்திய கலாசாரத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம் தான் அது’ என்று, பதில் அளித்திருந்தார்.
இதையடுத்து, சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ் என்பவர். அண்ணாமலைக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். இதை விசாரித்த சேலம் நீதிமன்றம், நாளை நேரில் ஆஜராக, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
இந்தப் புகாரை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும், ஆஜராக விலக்கு கோரியும், உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், ‘என் பேட்டி தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷனரி என்.ஜி.ஓ. வழக்கு தொடர்ந்திருப்பதாக, நான் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார், அவ்வாறு நான் கூறவில்லை. எனக்கு எதிராக, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த யாரும். எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை சார்பில், வழக்கறிஞர்கள் சி.வி.ஷியாம் சுந்தர், வி.வணங்காமுடி, ஆர்.பரமசிவம் ஆகியோர் ஆஜராகினர்.
சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி பியூஸ் மனுஷ்க்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரி 4க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.