திருவனந்தபுரத்தில் 5-வது உலகளாவிய ஆயுர்வேத மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று தொடங்கி வைக்கிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலகளாவிய ஆயுர்வேத மாநாடு (GAF) 2023 டிசம்பர் 1 முதல் 5 வரை நடைபெறுகிறது. உடல்நலத்தில் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் மறுமலர்ச்சி ஆயுர்வேதம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் இன்று தொடங்கி வைக்கிறார். இதில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மாற்று மருத்துவத்தின் சர்வதேச பயிற்சியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள், 70 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
ஆயுர்வேதத்தின் சமீபத்திய அறிவியல் முன்னேற்றங்கள், உயர்மட்ட தொழில்துறை மற்றும் நிறுவன பங்கேற்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிபுணர்கள் தலைமையிலான அறிவியல் அமர்வுகள், புதுமையான ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்புகள், ஆராய்ச்சி முயற்சிகள், சுவரொட்டிகள் மற்றும் ஆவணங்களின் விளக்கக்காட்சிகள் ஆகியவை மாநாட்டில் இடம்பெறும்.
நாட்டில் உள்ள அனைத்து முக்கிய ஆயுஷ் நிறுவனங்களும் கண்காட்சியில் தங்கள் ஸ்டால்களை வைத்துள்ளன. 20க்கும் மேற்பட்ட ஆயுர்வேத கல்லூரிகளின் அரங்குகள் அமைத்துள்ளன.