ஊட்டி மருத்துவ கல்லூரியில் குடிநீர் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மத்திய பாஜக அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது.
இதை அடுத்து ஊட்டியில் அமைந்துள்ள நீலகிரி மருத்துவக் கல்லூரியில் 150- எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது. மூன்றாவது ஆண்டாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்தக் கல்லூரி சர்வதேச சுற்றுலா தலங்களில் முக்கிய இடமான ஊட்டியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு முக்கியத்துவம் பெற்ற கல்லூரி ஆக கருதப்படுகிறது.
குறிப்பாக இந்த கல்லூரிக்கு செல்ல போதுமான சாலை வசதிகள் கிடையாது. சுற்றுச்சுவர், சோதனைச் சாவடிகள், கேன்டியன், பாதுகாப்பு உட்பட அடிப்படை வசதிகள் இல்லை, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த நிலையில் பெருவாரியான நாட்கள் மின்சாரம் கிடையாது.
இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் மின்சார குறைபாடால் வெளி மாவட்டங்களிலிருந்து சேர்ந்த மாணவர்கள் வெந்நீர் குடிக்க முடியாமல், குளிர்ந்த நீரை குடித்து வருகின்றனர். இதனால் பல மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கல்லூரியில் மாணவர்கள் குளிக்க மற்றும் குடிக்க பயன்படுத்துகின்ற தண்ணீர் டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று (29-ம் தேதி காலை முதல்) லாரி பழுதடைந்து விட்டதாக கூறி தண்ணீர் வழங்கவில்லை.
இதனால் மாணவர்களுக்கு குளிக்கவோ, குடிக்கவோ ஏன் கழிவறைகளுக்கு செல்ல கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். விடுதிக்கு அருகாமையில் உள்ள நிர்வாக கட்டிடத்திற்கு சென்று பக்கெட்டுகளில் குறைந்த அளவே தண்ணீர் பிடித்து வருவதோடு, அந்தக் குளிர்ந்த தண்ணீரையே மாணவர்கள் அருந்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாணவ, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். மேலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விடுதிகளிலே தங்கியுள்ளனர்.
மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கல்லூரி நிர்வாகம், நீலகிரி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு இத்தகவலை எடுத்து சென்றனர். ஆனால் இதுவரை தண்ணீருக்கான தீர்வு காணப்படவில்லை, இந்நிலையில் நேற்று இரவு மின்சாரம் தடைபட்டு உள்ளது என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மாணவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசும் சம்பந்தப்பட்ட துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.