கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் பி.ஆர்.எஸ். கட்சி வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. பா.ஜ.க., காங்கிரஸ், தெலுங்கு தேசம், உள்ளிட்ட கட்சிகளும் வெற்றி பெற்றன.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தோடு நிறைவடைகிறது. இதையடுத்து, இம்மாநிலத்துக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, நவம்பர் 30-ம் தேதி மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இம்மாநிலத்தைப் பொறுத்தவரை பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க., ஏ.ஐ.எம்.ஐ.எம்., பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என 6 கட்சிகள் போட்டியிடுகின்றன. எனினும், பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பி.ஆர்.எஸ். 119 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கிய 1 தொகுதியைத் தவிர்த்து மீதமுள்ள 118 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. பா.ஜ.க. 111 தொகுதிகளிலும், பவன் கல்யாண் கட்சி 8 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
முதல்வர் சந்திரசேகர ராவ், அவரது மகன் ராமராவ், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, எம்.பி. சஞ்சய் குமார் ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், மொத்தம் உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் வெற்றி பெற்றால் மெஜாரிட்டி கிடைத்துவிடும். ஒரு வேளை இந்த தேர்தலில், இழுபறி நிலை ஏற்பட்டால், தங்களுக்கு அது சாககமாக இருக்காது எனக் கருதும் காங்கிரஸ் கட்சி, வெற்றி பெறும் எம்எல்ஏக்களை பாதுகாக்க பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்க முடிவு செய்துள்ளது.
அதற்காக, பிரபல ஸ்டார் ஹோட்டலை வாடகைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.