ஒரு மனிதன் தவறு செய்தான் என்பதற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு செய்தது என்று சொல்லிவிட முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்ததைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற சிறப்பு நிறுவனங்களில் இருந்து பலர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் ராஜஸ்தானில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும், ஒரு தனிநபரின் குற்றத்திற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குறை சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக மொத்த காவல்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது என்றும் அண்ணாமலை கூறினார்.
தவறு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதனை அரசியலாக பார்க்கக்கூடாது என்றும், ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது என்றும், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.