நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் மூலம், நவம்பர் மாதத்தில் 1 இலட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வரி வசூல், ரூபாய் 1 இலட்சத்து 67 ஆயிரத்து 929 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூபாய் 1 இலட்சத்து 45 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
இதில், சிஜிஎஸ்டி 30 ஆயிரத்து 420 கோடி ரூபாயும், எஸ்ஜிஎஸ்டி 38 ஆயிரத்து 226 கோடி ரூபாயும், ஐஜிஎஸ்டி 87 ஆயிரத்து 9 கோடி ரூபாயும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ. 39 ஆயிரத்து 198 கோடியும் சேர்த்து), செஸ் வரி 12 ஆயிரத்து 274 கோடி ரூபாயும், (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூபாய் ஆயிரத்து 36 கோடி உட்பட) அடங்கும்.
ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூபாய் 37 ஆயிரத்து 878 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூபாய் 31 ஆயிரத்து 557 கோடியும் அரசு வழங்கி உள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் மூலம் ஒரு மாதத்தில் ரூபாய் 1 இலட்சத்து 50 ஆயிரம் கோடியைத் தாண்டுவது இது 9-வது முறை ஆகும். கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூபாய் 1 இலட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் குறைவாகும். 2023-24-ஆம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 6-வது முறையாக ரூபாய் 1 இலட்சத்து 60 ஆயிரம் கோடியைக் கடந்துள்ளது.