உத்தரப்பிரதேச மாநிலத்தில் கௌசாம்பி மாவட்டத்தில் உஜ்ஜைனி கிராமத்தில் இருந்த 50 மீட்டர் உயரமுள்ள மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது.
வடிவேலு கிணறு காமெடி போல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. உண்மையில் என்ன நடந்தது..?
மார்ச் மாதம் 31 ஆம் தேதி அன்று திருடப்பட்ட மொபைல் டவர் நவம்பர் 29 ஆம் தேதியன்று டெலிகாம் தொழில்நுட்ப வல்லுநரான ராஜேஷ் குமார் யாதவால் மொபைல் டவர் மர்மமான முறையில் காணாமல் போனது என்ற செய்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி அன்று மொபைல் டவர் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், புகார் அளிக்க ஏன் எட்டு மாதங்கள் தாமதமானது என்று அதிகாரிகள் குழப்பமடைந்து விசாரித்து வருகிறனர்.
இந்த மொபைல் டவர் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு இருந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைனி கிராமத்தில் சுமார் 10 டன் எடையும், 50 மீட்டர் உயரமும் கொண்ட இந்த மிகப்பெரிய மொபைல் டவர் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் புகாரில் மொபைல் டவர் மட்டுமின்றி, மின் சாதனங்கள், மொபைல் டவர் அசெம்பிளியுடன் தொடர்புடைய பல்வேறு உபகரணங்களும் திருடப்பட்டுள்ளது. மேலும் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 8.5 லட்சம் ரூபாயாகும்.
தொழில்நுட்ப வல்லுநர் ராஜேஷ் குமார் யாதவ் அளித்த முறையான புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379 (திருட்டு) இன் கீழ் காவல்துறையால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரில் ஜனவரி 2023 யில் உஜ்ஜைனி கிராமத்தில் உள்ள உபித் உல்லா என்ற உள்ளூர்வாசியின் வயல்வெளியில் தனது நிறுவனம் மொபைல் டவரை நிறுவியதாக ராஜேஷ் தெரிவித்தார்.
மார்ச் 31 அன்று ராஜேஷ் ஆய்வு நடத்திய போது எவ்விதமான தடையமும் இல்லாமல் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல் டவர் கட்டமைப்பு மாயமாகியுள்ளது என தெரிய வந்துள்ளது.
இதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரில் அரசு அதிகாரிகள் வேடமணிந்த திருடர்கள் 60 அடி இரும்புப் பாலத்தை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இந்த பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட உலோகம் ஸ்கிராப் இருப்பாக விற்கப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.