கடற்படை தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமைத் தளபதி விஆர் சௌத்ரி மற்றும் கடற்படைத் தளபதி ஆர் ஹரிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
1971-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரின் போது, டிசம்பர் 4 -ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்திற்குள், துணிச்சலாக நுழைந்த இந்தியக் கடற்படையினர், பாகிஸ்தானின் போர்கப்பல்களைத் தாக்கி அழித்தனர். ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ என்று அழைக்கப்பட்ட இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானின் முக்கிய போர்கப்பல்கள் அழிக்கப்பட்டன.
இந்திய கடற்படையின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 -ஆம் தேதி ‘இந்திய கடற்படை தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களும் நினைவுகூறப்படுகின்றனர்.
இந்த நிலையில், நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற சிந்துதுர் கோட்டையில், கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமான கடற்படை செயல் விளக்கம் 2023, டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடற்படை தலைமைத் தளபதி ஆர். ஹரிகுமார் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வை, மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், இராணுவப் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுகளிக்க உள்ளனர். இந்த நிகழ்வு நமது வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டாடுவதையும், பெருமைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகராஜாவால் 1660-ல் கட்டப்பட்ட சிந்துதுர் கோட்டை இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைப் பெருமைப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் இந்தியக் கடற்படையின் அதிநவீன கப்பல்கள், விமானங்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் பொதுமக்களுக்கும் காட்சிப்படுத்தப்படும்.
இந்த நிகழ்வில் 20 போர்க்கப்பல்கள், மிக் 29 கே, எல்.சி.ஏ உள்ளிட்ட 40 விமானங்கள் பங்கேற்க உள்ளன. மேலும், இந்தியக் கடற்படையின் கடல்சார் கமாண்டோக்களின் கடற்கரை கண்காணிப்பு மற்றும் தாக்குதல் செயல் விளக்கம் ஆகியவை நடைபெற உள்ளது.