சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங்கிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான விநியோக கொள்கையில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சஞ்சய் சிங்கிற்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தொழிலதிபர் தினேஷ் அரோரா ரூ.2 கோடியை மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் வீட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார் என்று அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதேபோல் அவரது கூட்டாளியான சர்வேஸ் மிஸ்ரா மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனிடையே சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.