இரஷ்ய – உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில், 1 இலட்சத்து 70 ஆயிரம் போர் வீரர்களை இராணுவத்தில் சேர்க்க, இரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதனால், ஆத்திரமடைந்த இரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.
இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. போரில் உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா கைப்பற்றியது. இரஷ்யா உக்ரைன் போர் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரஷ்யாவின் இராணுவ பலத்தை மேலும், 15 சதவீதம் அதிகரிக்க அனுமதி அளிக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், இரஷ்ய இராணுவத்தில், 1 இலட்சத்து 70 ஆயிரம் இராணுவ வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் நாட்டின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும் என்று இரஷ் தரப்பில் கூறப்படுகிறது.
உக்ரைன் – இரஷ்ய போர் 21 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் இராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரஷ்ய இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது.
இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்திருக்கும் போதிலும், ஜூன் மாதம் மிகப் பெரிய எதிர் தாக்குதலை நடத்திய போதிலும், இரஷ்யாவிடம் இருந்து தன்னுடைய இழந்த பகுதிகளை உக்ரைனால் கைப்பற்ற முடியவில்லை.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி தீவிர தாக்குதல் நடத்த இரஷ்யா முயன்றது. இந்த வாரத் தொடக்கத்தில், உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாட்டின் ஆறு இடங்களில், ஈரானில் தயாரிக்கப்பட்ட, 71 ஆளில்லா விமானங்களைக் கொண்டு இரஷ்யா தாக்குதல் நடத்த முயன்றது. இந்த ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கியதாக உக்ரைனிய விமானப்படை கூறியது.