ககன்யான் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட விண்வெளி வீரா்கள் அனைவரும் பயிற்சி முடித்து தயாா் நிலையில் இருக்கிறார்கள் என்று இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்திருக்கிறார்.
சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி 3 நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதாகும். இத்திட்டத்திற்காக 4 விண்வெளி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள பண்டித தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவா் சோமநாத், நிலவின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி சந்திரயான்-3 விண்கலம் வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனை சாத்தியமாக்க இஸ்ரோ இரவு பகலாக தொழில்நுட்பங்களை உருவாக்கியது.
இனி வரும் காலங்களிலும் எண்ணற்ற தொழில்நுட்பங்களை இஸ்ரோ உருவாக்கும். சந்திரயான்-3 மூலம் கிடைத்த வெற்றி எங்களுக்கு மேலும் உத்வேகம் அளித்திருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்தும் அளவிற்கு இந்தியா தற்போது உயா்ந்திருக்கிறது.
அந்த வகையில், முதலில் விண்ணுக்கு ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி சோதனை நடத்தப்படவுள்ளன. இதன் பிறகு, விண்ணுக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி 4 விண்வெளி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா். இதற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு, அனைவரும் பயிற்சியை முடித்து விண்ணுக்குச் செல்ல தயாா் நிலையில் உள்ளனா்.
செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கும், செலுத்துவதற்கும் எண்ணற்ற தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. மாணவா்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2035-ல் இந்தியாவுக்கான பிரத்யேக விண்வெளி மையம் அமைக்கும் பிரதமரின் கனவை நனவாக்க இன்னும் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
நிலவுக்கு மீண்டும் செல்ல வேண்டும். வெள்ளி, செவ்வாய் போன்ற கிரகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள விண்கலங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமே வளமான எதிா்காலத்தை தீா்மானிக்கிறது. தொழில்நுட்பத்தின் வளா்ச்சியால் மேம்படும் பொருளாதாரத்தால் நாம் உலகளவில் சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்க முடியும்” என்றாா்.
நிகழ்ச்சியில், தொழிலதிபரும் பல்கலைக்கழகத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி காணொலி வாயிலாக உரையாற்றினாா்.