மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது, 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
மிக்ஜாம் புயல் 4-ஆம் தேதி மாலை நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்றும், கரையைக் கடக்கும் போது சுமார், 90 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான, வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக சென்னை மெரினாவில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் கடல் சீற்றமும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் கடற்கரைக்கு வர வேண்டாம் என்று ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அதனை மீறி சிலர் கடற்கரையில் குவிந்து செல்பி எடுத்து வந்த நிலையில் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
மேலும் சென்னை மெரினா கடற்கரையின் முக்கிய நுழைவு வாயில் பகுதிகளை காவல்துறையினர் இன்று மூடினர். அதனையும் மீறி கடற்கரை பகுதிக்கு வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக பொது மக்கள் யாரும் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறித்தினர்.