மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிகக் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வரும் மத்திய, மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும்,
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என்றும்,
முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகாத வண்ணம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மிகவும் அத்தியாவசிய பொருட்களான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவைகளைத் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கயிறு, மெழுகுவர்த்தி, அவசர விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள் , மருத்துவக் கட்டு, உலர்ந்த உணவு வகைகள், மருந்துகள், குளுகோஸ் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,
பலத்த காற்றுக் காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் என்றும், கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பதுடன், ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல், பலத்த காற்றுக் காரணமாக, அதிகக் கன மழை பெய்யும் என்பதால், மின் கம்பங்கள், மின் கம்பிகள். மரங்கள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பொது மக்கள் வெளியில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும்,
புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.