கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்தார். இதன் மூலம், பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில் கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான யெகோவா சாட்சிகளின் சபையைச் சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை மாநாடு நடத்தினர். நிறைவு நாளான 29-ம் தேதி கூட்டுப் பிரார்த்தனைக்காக 2,000 பேர் கூடியிருந்தனர்.
அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களில் மற்றொரு பெண்ணும், 12 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல, அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்தனர். இதனால் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த சூழலில், தொடுபுழா அருகே உள்ள கொடிகுளம் வண்டமட்டத்தைச் சேர்ந்த ஜான் (76) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியான இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தார். களமச்சேரி குண்டு வெடிப்பில் சிக்கி 55 சதவீதம் தீக்காயமடைந்திருந்த இவர், ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதன் மூலம், களமச்சேரி குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சி பகுதியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.