தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய ‘மிக்ஜாம்’ தீவிர புயல் தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே கடந்தது.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 9-ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.