2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக இன்று ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யன் ஆகியோரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்க உள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யான் உடனான சந்திப்பின் போது, இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சந்திப்பின் போது, வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீடுகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்கள். மேலும், சர்வதேச பிரச்னைகள், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர், கச்சா எண்ணெய் சந்தை, இரு நாட்டு உறவு குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நாளை ரஷ்யா செல்ல உள்ளார். அங்கு அவர் அதிபர் புதினை சந்திக்கிறார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் – ஈரான் அதிபர் ரைசி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.