மாநிலத்தில் தேச விரோத திமுக அதிகாரத்தில் இருக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றியின் காரணம் என்ன என்பது பற்றி பலரும் பலமாதிரியாக சொல்லி வருகிறார்கள்!
ஒரு தேர்தலின் வெற்றி தோல்விக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கக்கூடும், சிலர் சிலவற்றை சொல்லி சாதிப்பர். சிலர் வேறு சிலவற்றைச் சொல்லி சாதிப்பர். சொல்லப்படும் எதையுமே நாம் மறுப்பதற்கில்லை. ஓரளவுக்கு காரணமாக இருந்தவை, பெரிதும் காரணமாக அமைந்தது என இரண்டு வகையாக நாம் பிரித்துக்கொள்ளலாம்.
கருணாநிதி பேரனின் ஹிந்துமத எதிர்ப்பு பேச்சு ஓரளவுக்கு காரணமாக இருந்திருக்கக்கூடும். ஏற்கெனவே பாஜகவின் வாக்காளர்களாக இருப்போர் மத்தியில்தான் கருணாநிதி பேரனின் பேச்சு அதிக தாக்கத்தை உண்டு பண்ணியியருக்கும். எனினும் ஒருசில காங்கிரஸ் வாக்காளர்களையும் அந்த மத அழிப்பு பேச்சு திசை திருப்பியிருக்கக்கூடும்.
உதயநிதியின் தேச விரோத ஹிந்து விரோத பேச்சை, ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மொழி பெயர்ப்பு செய்து பாரதம் முழுமையும் அனுப்பிவைத்த பெருமை மக்கள் தலைவர் அண்ணாமலையையே சாரும். எனவே, கருணாநிதி பேரனின் பேச்சு பாஜக வெற்றிக்கு ஓரளவுக்கு காரணம் எனில்,நாம் பாராட்ட வேண்டியது மக்கள் தலைவரைத்தான்.
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசல் ஓரளவுக்கு காரணமாக அமைந்துள்ளது!
வெற்றிக்கான முக்கிய காரணம் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த உண்மையான சாதனை தகவல்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததுதான்! ஒரு அரசியல் கட்சி மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றும் நல்ல கட்சியாக இருந்தால்மட்டும் போதாது, செய்த சாதனைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் வல்லமை உடையதாகவும் இருக்கவேண்டும். நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது! வல்லவனாகவும் இருக்க வேண்டும்!
மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் சதீஸ்கரிலும் மத்திய பாஜக அரசு செய்த மக்கள் நலதிட்டங்களையும் ,அந்தந்த மாநில பாஜக அரசுகள் செய்த மக்கள்நல திட்டங்களையும் திறமையோடு மக்களிடம் எடுத்துச் சொன்ன காரணத்தாலேயே பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது.
தெலுங்கானா மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் 100 சதவிகித மக்களுக்கும் சென்று சேர்ந்துள்ளது. ஆனால் அந்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வதில் தொய்வு இருந்த காரணத்தினாலேயே வெற்றிவாய்ப்பு தவறி உள்ளது!
அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் அளவில்தான் மத்திய அரசின் மக்கள் நல திட்ட சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சாதனை செய்திகள் எந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது என்பதை பொறுத்துதான் சட்ட மன்ற தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி தோல்விகள் அமைகின்றன.
மத்திய அரசும் மானில அரசும் சேர்ந்து இரட்டை எஞ்சின் அரசாக அமைய வேண்டும். மாநில அரசும் பாஜக அரசாக அமையும் நிலையில் மாநிலங்கள் இரட்டிப்பு பயனை அடையமுடியும் என்பது பாஜகவின் நிலைப்பாடாகும்!
தேசத்தின் அனைத்து மாநிலங்களும் டபுள் எஞ்சின் அரசாக பாஜக அரசாக அமையவேண்டும். காரணம் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்துமே தங்களின் குடும்பம் சம்பாதிப்பதற்காகவும் அரசு வரிப்பணத்தில் கமிஷன் சம்பாதிப்பதற்காகவும் இயற்கை வளங்களை சுரண்டி சம்பாதிப்பதற்காகவும் இந்திய எதிரிகளான சில வெளிநாட்டு சக்திகளோடு இணைந்து செயல்பட்டு பணம்பெறுவதற்காகவும் இன்னும் சில தேச விரோத செயல்பாடுகளுக்காகவுமே அரசியல் செய்கின்றன. ஏனெனில் மத்தியிலும் மாநிலத்திலும் அமைய வேண்டியது பாஜக ஆட்சி மட்டுமே!
2024ல் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பது இந்த மூன்று மாநில வெற்றி மூலமாக இன்னும் கெட்டியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் மாநிலத்தில் தேச விரோத திமுக அதிகாரத்தில் இருக்கிறது. திமுகவை விரட்டியடித்து 2026ல் தமிழகத்திலும் இரட்டை இஞ்சின் அரசாக பாஜக அரசை அமைக்கவேண்டியது தமிழக வாக்காளர்களின் கடமையாகும் எனத் தெரிவித்துள்ளார்.