தமிழகத்தை வாட்டிவதைத்த மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல பகுதிகள் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக இருளில் தத்தளித்து வருகின்றனர். பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மின் தடை குறித்து மின் ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் சொல்வது என்ன? என்பது குறித்து, சமூக வலைதளங்களில் கருத்து மிக வேகமாக பரவி வருகிறது.
அதில், 2003 மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சட்டத்தின்படி, பயனாளர்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது விதி. அதாவது, ஒரு நாளில் 24 மணி நேரமும், வாரத்தின்படி 7 நாட்களும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்.
அவ்வாறு தடையின்றி மின்சாரம் வழங்கத் தவறினால், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம்.
மின் பராமரிப்புப் பணி செய்தாலும், அது தொடர்பாக முன்அறிவிப்பு செய்த பின்னரே மின் தடை செய்ய வேண்டும் என விதிகள் கூறுகின்றன.
முன் அறிவிப்பு இல்லாமல், மாநில அரசு மின் தடை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட மாநில அரசு மீது பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி வேண்டி நுகர்வோர் நீதிமன்றம் அல்லது மாவட்டம் அல்லது உயர் நீதிமன்றம் ஆகியவற்றை நாடலாம்.
புதிய மின் இணைப்பு பெறுதல், அல்லது மின் இணைப்பை துண்டித்தல், அல்லது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் பெறுதல் அல்லது முகவரி மாற்றம் அல்லது பெயர் மாற்றம் என எதுவாக இருந்தாலும், அவை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் வாடிக்கையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெறலாம் என 2003 மின் ஒழுங்குமுறை சட்டம் 176-ன்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முடங்கிப்போய் உள்ள தமிழக அரசு மீது எந்த நேரத்திலும் வழக்கு பாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது.