சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு செய்கிறார்.
மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமுன் அகலவில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், குடியிருப்புகள் என அனைத்தையும் மழைநீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 12.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் ராஜ்நாத்சிங், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மூலம் பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துகிறார்.