3 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றிருக்கும் நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. தொடர்ந்து, டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்த போதிலும், 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 உட்பட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அப்போது, பா.ஜ.க. எம்.பி.க்கள் “மோடி ஜி கா ஸ்வகத் ஹை” என்று கோஷம் எழுப்பியதோடு, கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பிரதமர் மோடிக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர், கூட்டத்தினரை பார்த்து கைகூப்பி நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.