அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிரித்திருக்கிறது.
இந்த சூழலில், 25,000 மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. இப்பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்.
இதையடுத்து, பேராசிரியர்களும், மாணவர்களும் அலறி அடித்துக் கொண்டு, அங்குமிங்கும் சிதறி ஓடி இருக்கிறார்கள். எனினும், இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்து விட்டனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் அருகிலுள்ள விமான நிலையத்தில் முற்றிலுமாக சேவை பாதிக்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் சூதாட்ட மையமும் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடனே, நாங்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினோம்” என்றார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 25,000 மாணவர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், “நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, முதலில் 3 முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டேன். அதன் பிறகு 2 முறை சத்தம் கேட்டது. பின்னர், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ஆனால், போலீஸார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால், நாங்கள் அடித்தளத்திற்கு ஓடினோம். அங்கு நாங்கள் 20 நிமிடங்கள் பதுங்கி இருந்தோம். அந்த சமயத்தில் மழை வேறு பெய்து கொண்டிருந்தது” என்றார். லாஸ் வேகாஸில் கடந்த 2017-ம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.