தமிழக பாஜக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மழைவெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரனை மற்றும் வட சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் வீடு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவையான உணவு, தண்ணீர், பால் போன்றவை கிடைக்காமல் அவதி அடையும் நிலையும் உள்ளது.
இந்தநிலையில் வேளச்சேரி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும் தமிழக பாஜக சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் பொது மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் தமிழக பாஜக சார்பில் பாஜக மாநில தலைமையகமான கமலாலத்திலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.
இந்த நிவாரண பொருட்கள் கடந்த இரண்டு நாட்களாக கட்சியின் மாவட்ட தலைவர்கள் மூலமாக மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரையில் 1 இலட்ச குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பட்டுள்ளது. தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுவீச்சில் நிவாரண பொருட்கள் அனுப்பட்டுவருகிறது.