‘மிக்ஜம்’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.
‘மிக்ஜம்’ புயல் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மேலும் வேளச்சேரி, மடிப்பாக்கம், மணலி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வரை மழை நீர் வடியாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது புயல் வெள்ள பாதிப்பு சேத விவரங்கள் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, மிக்ஜம் புயல் மழை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும், அதை எதிர்கொண்டு தமிழக அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் வீடியோ படக்காட்சி காட்டப்பட்டது. பின்னர் இது குறித்து துறைச்சார்ந்த அதிகாரிகள் மத்திய அமைச்சருக்கு எடுத்துரைத்தனர்.