மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் பெருமழை கொட்டியதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ளம் புகுந்தது. பல ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமித்ஷா தனது X பக்கத்தில், ‘மிக்ஜாம் புயலால் தமிழ்நாடு, ஆந்திராவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், மாநில அரசுகளுக்கு உதவ, ரூ.493.60 கோடி ஆந்திராவுக்கும், ரூ.450 கோடி தமிழ்நாட்டிற்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடைவதை உறுதி செய்வோம்’ என பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, பெருமழை வெள்ளம் பாதிப்பு குறித்து, நவம்பர் 7 -ம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், நிவாரணம் குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 தவணையாக ரூ.450 கோடி மற்றும் சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி என மொத்தம் ரூ.1400 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
வெள்ளம் வடியும் முன்னரே, தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.