காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவர் குர்பத்வந்த் சிங் பண்ணுன். சீக்கியர்களுக்கான நீதி என்கிற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்ற இவர், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது மிரட்டல் வீடியோக்களை வெளியிடுவார்.
சமீபத்தில் இவர் ஏர் இந்தியா விமானத்துக்கு எதிராக அச்சுறுத்தல் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்ல சதி நடந்ததாகவும், அந்த சதியை முறியடித்து விட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.
மேலும், இந்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எஃப்.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து தங்களது கவலையை இந்தியாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்திய தரப்பில் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீண்டும் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
இந்த வருகையின்போது கிறிஸ்டோபர் ஏ வ்ரே, காலிஸ்தான் தீவிரவாதம், குண்டர்களுடனான தொடர்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் தீவிரவாதம் ஆகிய 3 முக்கியமான பிரச்சனைகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தலைவர் தினகர் குப்தாவுடன் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12 ஆண்டுகளில் எஃப்.பி.ஐ. இயக்குநரின் முதல் வருகை இதுவாகும். அதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு எஃப்.பி.ஐ. இயக்குனராக கிறிஸ்டோபர் ரே பதவியேற்ற பிறகு முதல் இந்தியா விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இப்பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.