கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையின் மாநாடு நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளான 29-ம் தேதி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயரிழந்தனர். இதில், 12 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். அதோடு, தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த சூழலில், லில்லி ஜான் என்கிற மூதாட்டி நேற்று இரவு உயிரிழந்தார்.
தொடுபுழா அருகே உள்ள கொடிக்குளம் வண்டமட்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி ஜான் என்பவரின் மனைவி லில்லி. 71 வயதான இவர், கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். யெகோவாவின் சாட்சிகள் சபையின் பிரார்த்தனை கூட்டத்தில் தனது கணவர் ஜானுடன் பங்கேற்றார்.
குண்டுவெடிப்பில் லில்லியும், அவரது கணவர் ஜானும் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான் இறந்துவிட்டார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த லில்லியும் நேற்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார்.
இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இக்குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.