ராகுல் காந்திக்கு மக்களைக் கவரும் செல்வாக்கோ, அரசியல் புரிதலோ இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததாக, அவரது மகள் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவர் பிரணாப் முகர்ஜி. நீண்ட காலம் மத்திய அமைச்சராகப் பணியாற்றியவர். குடியரசுத் தலைவராகவும் இருந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார். இந்த சூழலில், பிரணாப் முகர்ஜி தொடர்பான ‘என்னுடைய தந்தை பிரணாப்’ என்கிற பெயரில், அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி புத்தகம் எழுதி இருக்கிறார்.
இவரும் சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்தான். இவர், பிரணாப் முகர்ஜி கூறியது மற்றும் டைரியில் எழுதி இருப்பது, மற்றவர்களின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். அப்புத்தகத்தில், “காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது எனது தந்தை பிரணாப்புக்கு பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை.
ராகுல் காந்தி அடிக்கடி காணாமல் போய்விடுவார். அதுவும் முக்கியக் கட்டங்களில் மாயமாகி விடுவார் என்று பிரணாப் கூறியிருக்கிறார். மேலும், இது தொடர்பாக சில சம்பவங்களையும் விவரித்திருக்கிறார். தனது மகனை அடுத்த வாரிசாக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், மக்களைக் கவரும் அளவுக்கு செல்வாக்கோ, அரசியல் புரிதலோ ராகுல் காந்திக்கு இல்லை.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை எல்லாமே அவருக்கு எளிதாகக் கிடைத்து விடுகிறது. இதனால், அவற்றின் உண்மையான மதிப்பு அவருக்குத் தெரியவில்லை. இவரா காங்கிரஸ் கட்சியை கரையேற்றுவார்? மக்களை ஈர்ப்பார் என்று பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.
மேலும், குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இருந்தபோது, ஒருநாள் காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அன்றையதினம் ராகுல் காந்தி தன்னைச் சந்திக்க மாலை நேரத்தில் பிரணாப் நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால், அவர் காலையிலேயே வந்துவிட்டார்.
பொதுவாக, நடைப்பயிற்சி மற்றும் பூஜையின்போது எந்தத் தொந்தரவும் இருப்பதை பிரணாப்அவர் விரும்பியது கிடையாது. ஆனாலும், வேறு வழியில்லாமல் ராகுலை சந்தித்தார். எனினும், இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு காலை, மாலை வித்தியாசம் தெரியாத ராகுலின் அலுவலகத்தில் உள்ளவர்களா பிரதமர் அலுவலகத்தை நடத்திவிட முடியும் என்று குறிப்பிட்டார்” என்று கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடிக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் இடையேயான உறவு குறித்து கூறுகையில் “பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும், குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு தொல்லையாக இருக்க மாட்டேன். எந்த உதவி தேவை என்றாலும் தைரியமாகக் கேட்கலாம் என்று பிரணாப் முகர்ஜி கூறியதாக மோடியே என்னிடம் கூறினார்.
இருவரும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவர்கள் என்றாலும், இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே மிகவும் வெளிப்படையான, நேர்மையான ஒரு வினோத நட்பு இருந்தது. இதனால்தான், பிரணாப் முகர்ஜியை எப்போது சந்தித்தாலும் அவரது காலைத் தொட்டு மோடி வணங்குவார். அது தனக்கு ஒரு திருப்தியை அளிப்பதாகவும் மோடி கூறியிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.