இந்திய வம்சாவளி நாவலாசிரியரான மெய்ரா சந்த், இந்த வருடத்துக்கான சிங்கப்பூரின் மிக உயர்ந்த கலை விருதைப் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான விருதை 81 வயதாகும் இந்திய வம்சாவளி எழுத்தாளரான மெய்ரா சந்த் உட்பட, 3 சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு நாட்டின் உயரிய கலை விருதான, கலாச்சார விருது வழங்கப்பட்டுள்ளது.
இஸ்தானாவில் நடைபெற்ற விழாவில் சக நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலாய் நாட்டு நடனக் கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீத் ஆகியோருடன் இந்திய வம்சாவளியான மெய்ரா சந்த் இந்த விருதை பெற்றார். சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் விருதாளர்களுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.
இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் வழங்கப்படும். 1997-ம் ஆண்டு ஹோ மின்ஃபோங்கிற்குப் பிறகு, சிங்கப்பூர்வாசியான மீரா சந்த் இந்த விருதைப் பெற்ற ஆங்கில மொழி பெண் எழுத்தாளராக பெருமை பெறுகிறார். முன்னதாக 1986-ல் வெளியான இவரது ‘தி பெயின்டட் கேஜ்’, புக்கர் பரிசுக்காக பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் செலவிட்ட காலம் தனது வாழ்க்கையை மாற்றும் அனுபவத்தை தந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். “என் வாழ்க்கையில் முதன்முறையாக, நான் அறிந்திராத ஒரு பாதியை சந்தித்தேன். அந்த அனுபவத்தை எழுத்தின் மூலம் புரிந்து கொள்வதன்றி வேறு வழி அப்போது தென்படவில்லை” என்று தனது எழுத்து பிறந்த பின்னணியை நினைவுகூர்கிறார்
கடந்த வருடம், தமிழரான இந்து அரவிந்த் குமாரசாமிக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.