பெய்ரூட்டும் காஸாவாக மாறும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக, இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் பதிலடித் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலில் வடக்கு காஸா நகரமே உருக்குலைந்து விட்டது. ஹமாஸ் முக்கியத் தலைவர்கள், தளபதிகள் உட்பட 16,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதத் தலைமையகம், முகாம்கள், சுரங்கப் பாதைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இதனிடையே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான போர் பிராந்தியப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
ஆனால், இந்த விவகாரத்தில் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் தலையிடவில்லை. இந்த சூழலில்தான், காஸாவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் லெபனானுக்கும் ஏற்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில், “ஹிஸ்புல்லா முழு அளவில் போரைத் தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காஸாவாகவும், தெற்கு லெபனானை கான்யூனிஸ் நகராகவும் மாற்றும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையே, ஹமாஸ் – இஸ்ரேல் போரைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.
மேலும், காஸாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து நெதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், ஹிஸ்புல்லா அமைப்புக்கு நெகன்யாகு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.