உத்திரமேரூர் அருகே சேதம் அடைந்த அழிசூர் சிவன் கோவிலை பார்வையிட சென்ற இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், அழிசூரில் சிவன் கோவில் அமைந்துள்ளது. கிபி-1122-ஆம் நூற்றாண்டில் விக்கிரம சோழனால் கட்டப்பட்ட, பல ஏக்கர் பரப்பிலான சொத்துக்களை கொண்ட ,அருளாலீஷ்வரர் திருக்கோவிலின் ஒரு பகுதி அண்மையில் பெய்த கனமழையில் சரிந்தது.
இதனையடுத்து அந்த கோவிலை பார்வையிடுவதற்காக இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் லட்சுமி காந்தன் சென்றார். அவரை முற்றுகையிட்ட பாஜகவினர் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சோழனூர் ஏழுமலை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இந்து கோவில் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடும் அறநிலையத் துறையினர் உத்திரமேரூரில் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை முறையாக நிர்வகிக்காமல் கோவிலின் சொத்துக்களையும், குத்தகை பணத்தை சூரையாடுவதாக குற்றம்சாட்டினார்.
அழிசூர் சிவன் கோவில் கோபுர கலசவிமானம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்ததாகவும், தற்போது, மற்றொரு பகுதி இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கோவில் புனரமைப்பு பணிகள் குறித்து கேள்வி எழுப்பினால், இந்து அறநிலையத் துறை நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் கடன் வாங்கி கோவிலை புனரமைக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே சிவன் கோவிலின் புனரமைப்பு பணிகளை விரைவில் தொடங்கவில்லை என்றால் மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக உத்திரமேரூர் மேற்கு மண்டல பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.