ஸ்பெயினில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஹம்சா சலீம் தார் என்ற வீரர் 43 பந்துகளில் 193 ரன்களை விளாசியுள்ளார்.
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு கிரிக்கெட் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிரிக்கெட் பல வடிவில் நடத்தப்படுவதுண்டு. அதில் டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து தற்போது டி10 கிரிக்கெட் போட்டிகளும் ஒரு சில நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அண்மை காலங்களில் டி20 கிரிக்கெட்டை விடவும் டி10 கிரிக்கெட் போட்டிகள் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வே நாட்டில் டி10 லீக் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற டி10 லீக் போட்டியில் அசாத்திய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா டி10 லீக் தொடரில் கேட்டலூன்யா ஜாக்குவார் அணியை எதிர்த்து சோஹல் ஹாஸ்பிடலேட் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கேட்டலூன்யா ஜாக்குவார் அணியின் தொடக்க வீரர்களாக ஹம்சா சலீம் தார் – யாசிர் அலி களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடியில் பொளந்து கட்டிய ஹம்சா சலீம், வெறும் 24 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் அனைத்து பந்துகளையும் சிக்சர், பவுண்டரி என்று விளாசி தள்ளினார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஹம்சா சலீம் 43 பந்துகளில் 22 சிக்ஸர், 14 பவுண்டரிகள் உட்பட 193 ரன்களை விளாசினார். டி10 கிரிக்கெட் லீக்கில் விளாசப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் இதுதான். பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாக மட்டுமே 188 ரன்களை அவர் விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 448.84ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் மூலமாக கேட்டலூன்யா ஜாக்குவார் அணி 10 ஓவர்களில் 257 ரன்களை குவித்தது. இதில் சோஹல் ஹாஸ்பிடலேட் அணி தரப்பில் முகமது வாரிஸ் என்ற வீரர் வீசிய 2 ஓவர்களில் 73 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின் களமிறங்கிய சோஹல் ஹாஸ்பிடலேட் அணி 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் கேட்டலூன்யா ஜாக்குவார் அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் ஹம்சா சலீம் விளையாடிய ஆட்டத்தின் வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
ஐரோப்பா டி10 லீக் தொடரில் 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள 2வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.