கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்களை இந்தியத் தூதர் சந்தித்ததாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளை செய்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “இந்தியாவில் கிரிமினல் மற்றும் தீவிரவாதம் செய்துவிட்டு வெளிநாட்டில் தப்பிச் சென்றவர்கள், இந்திய சட்ட திட்டங்களின்படி சட்ட அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு பி.எஸ்.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீதான தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அட்னான் அகமது சமீபத்தில் பாகிஸ்தானின் கராச்சியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் குறித்து என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது. வரும் 13-ம் தேதி அல்லது அதற்கு முன்பு நாடாளுமன்றத்தை தாக்கப் போவதாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறோம்.
மிரட்டல் விடுக்கும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கவோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ விரும்பவில்லை. இந்த விஷயத்தை அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறோம்.
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக இதுவரை 2 விசாரணைகள் நடந்திருக்கிறது. அவர்களது குடும்பத்தினர் மூலம் மேல்முறையீடு செய்தோம். இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்கி வருகிறோம்.
இதற்கிடையே, சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க டிசம்பர் 3-ம் தேதி எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சனை. ஆகவே, சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம். நாங்கள் எதைப் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதைத்தான் நாங்கள் செய்வோம்” என்றார்.