அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இன்று அவசர நிலை ஒத்திகை நடைப்பெற்றது.
அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இந்திய அணுமின் நிறுவனத்தின் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் உள்ளன.
இந்த மையம் அவசர கால தயார் நிலை திட்டத்தின்படி, வளாகத்தில் அவசர நிலை ஒத்திகையை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது. அந்த ஒத்திகை இன்று நடைபெற்றது.
பல பாதுகாப்பு அடுக்குகள் கொண்ட சென்னை அணுமின் நிலைய அணு உலையில் இம்மாதிரியான விபத்து நடக்க சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்றாலும், நிலையத்தின் அவசர நிலை தயார்நிலை செயல்பாட்டை சோதிப்பதே இத்தகைய ஒத்திகைகளின் முக்கிய நோக்கமாகும்.
கல்பாக்கம் வளாக அவசர நிலை நிர்வாகக் குழுவின் தலைவரான, சென்னை அணு மின் நிலைய இயக்குனர் சுதிர் பி ஷெல்கே இந்த ஒத்திகையை முன்னின்று நடத்தினார்.
இந்த ஒத்திகை அணுசக்தி துறை மையத்தின் அவசரநிலை திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி செயல்படுத்தப்பட்டது. இதன்படி, கீழ்க்கண்ட ஒத்திகைகள் நடைபெற்றன.
நிலைய ஊழியர்களை பாதுகாப்பான கட்டிடங்களில் இருக்க செய்தல். காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை தரும் ஒத்திகை இனிப்பு மிட்டாய் வழங்குதல் (அயோடின் மாத்திரைகளுக்கான ஒத்திகை). அத்தியாவசிய ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களை வளாகத்தில் இருந்து வெளியேற்றி நகரியத்தில் சேர்த்தல். கதிர்வீச்சு மாசுபட்ட வண்டியை சுத்தம் செய்யும் ஒத்திகை.
கல்பாக்கம் அணுசக்தி மையப் பிரிவுகளின் இயக்குனர்கள் மற்றும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் (AERB) பார்வையாளர்கள் இந்த ஒத்திகையை கண்காணித்தனர்.
வளாகத்தை சேர்ந்த 7500 பேர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். ஒத்திகையின் ஒரு பகுதியாக ஊழியர்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். இந்த வெளியேற்றம் 1½ மணி நேரத்தில் நடந்தேறியது. முழு ஒத்திகையும் 2½ மணி நேரத்தில் நிகழ்த்தி முடிக்கப்பட்டது. இந்த ஒத்திகை எந்தவித முன்னறிவிப்பின்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.