அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் நடத்திய உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்திருக்கிறார்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் “மார்னிங் கன்சல்ட்”. இந்நிறுவனம் அவ்வப்போது உலகின் பிரபலமான தலைவர்கள், சக்தி வாய்ந்த தலைவர்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகளை நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை ஒரு ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து உலகின் பிரபலமான தலைவர்கள் குறித்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக 76 சதவீதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். 18 சதவீதம் பேர் மோடிக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அதேசமயம், 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இப்பட்டியலில், மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவெல் லோபெஸ் ஓப்ரடோ 66 சதவீதம் பேர் ஆதரவுடன் 2-வது இடத்தையும், சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் 58 சதவீதம் பேர் ஆதரவுடன் 3-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள்.
அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 37 சதவீதம் பேரும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 31 சதவீதம் பேரும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு 25 சதவீதம் பேரும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு 24 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
மார்னிங் கன்சல்ட் நிறுவனம் நடத்தி வரும் ஆய்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறார். அதேபோல, பிற நிறுவனங்கள் நடத்திய ஆய்விலும் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.