நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை நீதிபதிகள் பின்பற்றியாக வேண்டும். நான் விரும்பியதைத்தான் செய்வேன் என்று ஒரு நீதிபதி கூற முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமா்வு முன்பு ஒரு மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை வழக்கறிஞா் மேத்யூஸ் ஜெ.நெடும்பரா தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகளை கொலீஜியம் பரிந்துரை செய்து வருகிறது. இந்த கொலீஜியம் நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், மூத்த வழக்கறிஞா் என்கிற பதவியை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “ஒரு வழக்கறிஞராக உங்கள் மனம் விரும்புவதைக் கேட்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது. அதேசமயம், ஒரு தலைமை நீதிபதியாக சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின் சேவகன் நான். ஆகவே, நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும். நான் விரும்பியதைத்தான் செய்வேன் என்று ஒரு நீதிபதியாகக் கூற முடியாது” என்றார்.
வழக்கறிஞர் மேத்யூஸ் ஜெ.நெடும்பரா உட்பட 8 பேர், மூத்த வழக்கறிஞா் என்கிற பதவியை ரத்து செய்யக் கோரி ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான அமா்வு, கடந்த அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், “இந்த மனு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது. மூத்த வழக்கறிஞா் பதவி என்பது வழக்கறிஞரின் அனுபவம் மற்றும் தகுதிக்கு நீதிமன்றம் கொடுக்கும் அங்கீகாரமாகும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.