மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பார்க்கிளிங் வகை மெழுகுவர்த்திகள் அதிகளவில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த கோர விபத்தில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சி ஆணையர் சேகர் சிங் கூறுகையில், “தலவாடேயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்புப் படைக்கு அழைப்பு வந்தது. விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இத்தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும், காயமடைந்த 8 பேர் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.