டெல்லியில் நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அவசர மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேலோ இந்திய பாரா விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது. இப்போட்டிகள் 17 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் என மொத்தம் 7 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்கப்படும் என்று இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவசர மருத்துவச் சேவைகள், ஆன்-சைட் மருத்துவக் குழுக்கள் மற்றும் தேவையான சுகாதார வசதிகள் இந்த மருத்துவ பாதுகாப்பில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின், இயக்குநர் பிபு நாயக் கூறுகையில், பங்கேற்கும் அனைத்து பாரா தடகள வீரர்களும் பாதுகாப்பாக போட்டியிடத் தேவையான மருத்துவ உதவியை பெறுவதற்கு அமைச்சகத்தின் கீழ் உள்ள கேலோ இந்தியா பிரிவின் சார்பில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.