உள்நாட்டுச் சந்தைகளில் வெங்காயம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும் 2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.
வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால், சாதாரண மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். ஆகவே, நுகர்வோரின் சிரமத்தைப் போக்கும் வகையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை டிசம்பர் 31-ம் தேதி வரை 40 சதவீதமாக நிர்ணயம் செய்தது. இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது, மத்திய அரசு மத்திய இருப்பிலிருந்து வெங்காயத்தை விடுவித்து கிலோ 25 ரூபாய்க்கு சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்க வழிவகை செய்தது.
அதோடு, ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் விதமாக அக்டோபர் 28 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன் ஒன்றுக்கு 66,700 ரூபாயாக மத்திய அரசு நிா்ணயம் செய்தது. இந்த சூழலில், வெங்காயத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரித்திருக்கிறது. தலைநகர் டெல்லியில் 1 கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.
அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி விலை கடந்த வியாழக்கிழமை கிலோ 57.11 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டு காலத்தை ஒப்பிடுகையில் 97.95% அதிகமாகும். ஆகவே, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். இந்தத் தடை நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
அதன்படி, இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பெறப்பட்ட ஆர்டர்கள், கப்பலில் ஏற்றப்படும் வெங்காயங்கள், சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வெங்காயங்கள் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கான கெடு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதேசமயம், பிற நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு வழங்கும் அனுமதியின் அடிப்படையில், வெங்காயம் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, சர்க்கரை ஆலைகள், கரும்புச் சாற்றை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில், வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளுக்கே பெரும்பாலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.