2023-24-ம் ஆண்டுக்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முன்பதிவு விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால், உணவு தானியங்களை 100 சதவிகிதம் சணல் சாக்குகளில்தான் பேக்கேஜிங் செய்ய வேண்டும்.
இந்தியாவில் சணல் பயிர் உற்பத்தியில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள சணல் தொழிற்சாலைகளில் 75 சதவீதம் மேற்கு வங்கத்தில்தான் உள்ளன. மத்திய அரசு பொது வினியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களின் விநியோகத்திற்கு சணல் பைகளை பயன்படுத்துமாறு தேசிய உணவு கழகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.
இதன்படி, உணவுக் கழகமும், இதர மாநில முகமை அமைப்புகளும், உணவு தானியங்களை சணல் பைகளில் அடைத்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வருகின்றன. இதற்காக, கரீப் மற்றும் ரபி பருவங்களில் சணல் பைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சணல் துறை ஆண்டுக்கு 15 லட்சம் டன் சணல் பைகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இதில், சுமார் 35 – 40 சதவீதம், அதாவது 8 லட்சம் டன் சணல் பைகளை, தேசிய உணவுக் கழகம் கொள்முதல் செய்கிறது. இந்த சணல் பைகள், பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிஸா மற்றும் பீகார் மாநிலங்களின் உணவு தானியக் கொள்முதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இதர மாநில முகமை அமைப்புகளும் சணல் பைகளை கொள்முதல் செய்கின்றன.
ஆனால், சணல் பைகள் அதிக விலை கொண்டதாக இருப்பதால், முகமை அமைப்புகள் சணல் சாக்குகளை கொள்முதல் செய்யாமல் பாலிதீன் சாக்குகளை கொள்முதல் செய்து வருகின்றன. இதனால், சணல் தொழில் நசிந்து வருவதோடு, அத்துறை 1,000 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், 2023- 24-ம் ஆண்டுக்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முன்பதிவு விதிமுறைகளை அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, உணவு தானியங்களை 100 சதவீதமும், சர்க்கரையை 20 சதவீதமும் கட்டாயமாக சணல் பைகளில் பேக் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, தற்போதைய முன்மொழிவில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகள், இந்தியாவில் உள்ள சணல் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியின் நலனை பாதுகாக்கும். மேலும், இதன் மூலம் ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் தன்னிறைவு பெறும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சணல் பேக்கேஜிங் பொருட்கள் (பேக்கிங் பொருட்களில் கட்டாய பயன்பாடு) ஜே.பி.எம். சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம், சணல் ஆலைகள் மற்றும் துணை அலகுகளில் பணிபுரியும் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதோடு, சுமார் 40 லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவளிக்கும்.
இது தவிர, சணல் இயற்கையானது, மக்கக்கூடியது, புதுப்பிக்கத்தக்கது மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நார்ச்சத்து மற்றும் அனைத்து நிலைத்தன்மை அளவுருக்களையும் பூர்த்தி செய்வதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.