குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மிக பிரமாண்டமாகவும், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள, நாட்டின் முதல் புல்லட் இரயில் நிலையத்தின் வீடியோவை, மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில், புல்லட் இரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புல்லட் இரயில், மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மொத்த மதிப்பு, 1 இலட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் முதற்கட்ட பணிகள் நிறைவடையும் என்றும், 2028-ஆம் ஆண்டு அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில், சபர்மதி போக்குவரத்து மையத்தில் கட்டப்பட்டுள்ள, நாட்டின் முதல் புல்லட் இரயில் நிலையத்தின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றத்தின் வீடியோவை, மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மிக பிரமாண்டமாக அதிநவீன வசதிகளுடன், கட்டுமான கலை அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள, இந்த இரயில் நிலையம், நாட்டின் கலாச்சார பாரம்பரியமாகத் திகழும் வகையில் உள்ளது.
கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அலங்காரப் பொருட்கள் ஆனது, பழமையையும், புதுமையையும் இணைத்து பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. மேலும், பயணியருக்கு ஏற்ற வகையில் இரயில் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.