விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த அஜித், மீண்டும் அஜர்பைஜான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அறிவிப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகினார்.
பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இந்த திரைப்படம் சென்றது, ஆனால் இந்த கதையை உருவாக்க அதிக அவகாசம் தேவைப்பட்டதால் இந்த திரைப்படத்தின் டைட்டில் வெளியாகவே பல மாதங்கள் ஆனது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அஜித், நடிகை திரிஷா உள்ளிட்ட விடாமுயற்சி பட குழு அஜர்பைஜான் நாட்டிற்கு படப்பிடிப்புக்காக சென்றது. அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்த பிரபல கலை இயக்குனர் மிலன் காலமானார். இது அப்படக் குழுவின் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்பியது விடாமுயற்சி படக்குழு.
கடந்த இரண்டு வாரங்களாக ஓய்வில் இருந்த அஜித், படப்பிடிப்புக்காக மீண்டும் சென்னையில் இருந்து அஜர்பைஜான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
துபாய் உள்ளிட்ட பிற நாடுகளிலும் விடாமுயற்சி படப்பிடிப்பு நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ள அஜித் தொடர்ச்சியாக 70 நாட்கள் இந்த திரைப்பட பணியில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.