கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன்குமார், மலேசியாவின் சியாம் ஜூன் வெய்யுடன் மோதினார். இதில் மலேசியாவின் சியாம் ஜூன் வெய் 21-14, 12-21, 9-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அதேபோல் பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் 21-12, 21-16 என்ற நேர்செட்டில் மலேசியாவின் லிட்ஷனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 22-20, 21-16 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் ஜெசிதா புத்ரி-பெபி செட்டியனிங்ரம் இணையை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ கூட்டணி 21-16, 21-17 என்ற நேர்செட்டில் இந்தோனேசியாவின் அம்ரி சாக்நவி-வின்னி ஒக்தாவினா இணையைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.