ஹமாஸை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி விளக்கம் அளித்திருக்கிறார்.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்மூடித்தனமாக மக்களை சுட்டுக் கொலை செய்ததோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இதற்கு தற்போது இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. 2 மாதங்களுக்கும் மேலாக காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது. எனவே, இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. உட்பட உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. அதேசமயம், ஹமாஸ் அமைப்பினரை பகிரங்கமாக தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் உலக நாடுகளை வற்புறுத்தி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததோடு, இஸ்ரேலுக்கு ஆதரவாக துணை நிற்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரும், ஹமாஸை தீவிரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும் என்று நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஹமாஸை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்ததாக ஒரு கடிதம் இணையத்தில் வெளியானது. அதாவது, மக்களவையில் உறுப்பினர் கே.சுதாகரன் கேட்ட கேள்விக்கு மீனாட்சி லேகி பதில் அளித்ததாகக் கூறி, வெளியுறவுத்துறை இணையத்தில் ஒரு கடிதம் வெளியானது.
அந்த பதிலும் நேரடியாக இல்லாமல், குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA), கீழ் தீவிரவாத அமைப்பாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தை மேற்கோள்காட்டி, இந்தியாவில் ஹமாஸ் அமைப்பை தடை செய்யும் முன்மொழிவு ஏதேனும் உள்ளதா? என்று ஒருவர் மீனாட்சி லேகியை டேக் செய்து கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருக்கும் மீனாட்சி லேகி, “உங்களுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி மற்றும் பதிலுடன் நான் எந்த பேப்பரிலும் கையெழுத்திடவில்லை. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் பதில் அளிப்பார்கள்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்திருக்கிறார்.
மற்றொரு எக்ஸ் பதிவில் “குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
You have been misinformed as I have not signed any paper with this question and this answer @DrSJaishankar @PMOIndia https://t.co/4xUWjROeNH
— Meenakashi Lekhi (@M_Lekhi) December 8, 2023
நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் சம்மந்தப்பட்ட அமைச்சகங்களிடம் கேள்விகள் கேட்டால், அவர்களுக்கு அந்தந்த அமைச்சகங்கள் மூலம் பதில் அனுப்பப்படும். இந்தக் கேள்வி, பதில்கள் அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் மக்களவை இணையதளங்களில் பதிவேற்றப்படும்.
இதில், நட்சத்திரக் கேள்விகள் என்று அறிப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள், மக்களவையின் கேள்வி நேரத்தின்போது அவையில் வைக்கப்படும். அந்த நேரத்தி்ல் சபாநாயகர் உறுப்பினர்களை அனுமதித்தால் கூடுதல் கேள்விகள் கேட்கலாம். இந்த கையெழுத்து விவகாரத்தில் அந்தக் கேள்வி நட்சத்திரமிடப்படாத கேள்வி என்பது குறிப்பிடத்தக்கது.