பாகிஸ்தான் இராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததால்தான், பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பரபரப்புத் தகவலை கூறியிருக்கிறார்.
1990 முதல் 1993 வரையும், 1997 முதல் 1999 வரையும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். மேலும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர், 1999-ம் ஆண்டு இராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப்பின் இராணுவப் புரட்சியால் ஆட்சியை இழந்தார்.
இந்த நிலையில்தான், தான் பதவியில் இருந்து அகற்றப்பட்டதற்கு, கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததுதான் காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து நவாஸ் ஷெரீப் கூறுகையில், “1993 மற்றும்1999-ம் ஆண்டுகளில் நான் ஏன் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்று அனைவரிடமும் கூற வேண்டும்.
பாகிஸ்தான் இராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை நான் எதிர்த்தேன். அது நடக்கக் கூடாது என்றேன். இதனால், அப்போதைய இராணுவ தளபதி முஷாரப், என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றினார். கடைசியில் நான் சொன்னது தான் சரி என்பது நிரூபணம் ஆனது.
நான் பிரதமர் பதவியில் இருந்தபோதுதான், 2 இந்திய பிரதமர்கள் பாகிஸ்தான் வந்தனர். நரேந்திர மோடியும், வாஜ்பாயும் லாகூர் வந்தனர். இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டும். சீன உறவை இன்னும் வலுவாக்குவது முக்கியம்.
இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, நாடு பொருளாதாரத்தில் சரியத் தொடங்கியது. ஆனால், ஷெபாஸ் ஷெரீப் பதவிக் காலத்தில் நாடு திவாலாவதில் இருந்து தடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார். கார்கில் ஊடுருவலை தடுத்ததால்தான் தான் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக நவாஸ் ஷெரீப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.