பெங்களூரு அணிக்காக விளையாடி, விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பை வென்று தர வேண்டும் என்பதே தனது ஆசை என ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதில் இந்தியாவிலிருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் 10 ஐபிஎல் அணிகளால் மொத்தமாக 77 இடங்களை மட்டுமே நிரப்ப முடியும்.
அதில் 30 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 47 இந்திய வீரர்களின் இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இதனால் எந்தெந்த வீரருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதிகளவில் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணியின் ஏராளமான வீரர்கள் டி20 லீக் மற்றும் டி10 லீக் தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு அணிகளின் திட்டங்களில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இப்ராஹிம் ஜத்ரான் ஏலத்தில் வாங்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் குறித்து இப்ராஹிம் ஜத்ரான் பேசுகையில், ஒவ்வொரு வீரரையும் போல் எனக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதுதான் எனது கனவு என்றும் சொல்லலாம்.
அதேபோல் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. இம்முறை அவருடன் இணைந்து பயணித்து கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜத்ரான் 1,712 ரன்களை விளாசியுள்ளார். அதில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 பேட்டிங் சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.