இங்கிலாந்தில் பாதுகாப்புக்கான இளவரசர் ஹாரியின் போராட்டம் தொடர்கிறது. போதுமான பாதுகாப்பு இல்லாமல் வீட்டிற்குச் செல்லும்போது தானும் தனது குடும்பத்தினரும் ஒருபோதும் பாதுகாப்பாக உணர முடியாது என்று ஹாரி கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டின் மன்னர் 3-ம் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மனைவி மேகனுடன் பிரிட்டிஷ் அரச குடும்பத்தை விட்டு வெளியேறி, அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தார். இதனால், இங்கிலாந்தின் வரி செலுத்துவோர் நிதியுதவி பெற்ற பாதுகாப்பு நீக்கப்பட்டது.
இதையடுத்து, ஹாரி லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது ஹாரியின் வழக்கறிஞர் ஷஹீத் பாத்திமா, “ஹாரியின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை ஏற்கவில்லை” என்றார்.
மேலும், பாத்திமா நீதிமன்றத்தில் ஹாரியின் எழுத்துப்பூர்வ அறிக்கையைப் படித்தார். அதில், “நானும் எனது மனைவியும் 2020-ல் இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இங்கிலாந்து எனது வீடு. எனது குழந்தைகளின் பாரம்பரியத்தின் மையமாகும்.
ஆகவே, எனது குழந்தைகள் அமெரிக்காவில் வசிக்கும் இடத்தைப் போலவே, இங்கிலாந்திலும் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது குழந்தைகள் இங்கிலாந்து மண்ணில் இருக்கும்போது, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாவிட்டால் அது நடக்காது.
என்னால் என் மனைவியை அப்படி ஆபத்தில் ஆழ்த்த முடியாது. வாழ்க்கையில் எனது அனுபவங்களைக் கருத்தில் கொண்டு தேவையில்லாமல் என்னைத் தீங்கிழைக்கத் தயங்குகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
எனினும், இங்கிலாந்தில் இருந்து ஹாரி வெளியேறினாலும் அவரது அரச குடும்ப அந்தஸ்து மற்றும் அவரது தாயார் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.